ரோஸ்விக் பிறந்தநாள்...

|

இன்றைய காலைப்பொழுது மிக இனிமையான தகவலுடன் தொடங்கியது. ஆம், அன்புத் தம்பி ரோஸ்விக்-கின் பிறந்த நாள் என சி்ங்கை பிளாக்கர்ஸ் மெயிலில் இருந்து தகவல். ஆஹா, உடன் இருக்கிறோம், தெரியவில்லையே என வியந்து (செல்லமாய் மனதுக்குள் தி்ட்டு) அவர் எழக்காத்திருந்து வாழ்த்துக்களை தெரிவித்து, உடன் ஒரு இடுகையாக்க முடிவுசெய்து... இப்போது உங்களோடு...


ஒரு பின்னூட்டம் வாயிலாகத்தான் அறிமுகமானது தம்பியுடன். ஓட்டு போடுவதைப்பற்றி அவர் எழுதியிருந்த ஒரு விஷயத்திற்கு பதில் சொல்லப்போக கிடைத்த அந்த ஆரம்ப நட்பு வேர்விட்டு இன்று விருட்சமாய்....

சிங்கை இடுகையாளர்களின் அறிமுகம் இவரால்தான் எனக்குக் கிடைத்தது. அண்ணா எனப்பேசும்போதே மனதிற்குள் சில்லென ஒரு சிலிர்ப்பு ஏற்படும். அருகிலேயே பணியிடம், ஒரே இடத்தில் தங்கியிருத்தல், எல்லா விஷயங்களிலும் உறுதுணையாயிருத்தல் என பல விஷயங்களை நான் பெருமையாய் சொல்லிக்கொள்ளலாம். வயதில் தான் தம்பி, விஷயங்களில் அண்ணன். அறிவுறுத்துதலிலாகட்டும், எதையும் திட்டமிட்டு செய்வதிலாகட்டும், வீட்டு நிர்வாகத்தி்லாகட்டும், மிகவும் சரியாக செய்வார்.

சில நட்புக்கள் ஏன் தாமதமாய் கிடைத்தது என ஏங்க வைக்கும். தம்பியுடன் கிடைத்த நட்பு அந்த வகையைச் சேர்ந்ததே... எனக்கு தம்பி இல்லாத குறையை போக்குபவர்களில் ரோஸ்விக்கும் ஒருவர் என சொல்வதில் பெருமை அடைகிறேன்.

இந்த இனிய பிறந்த நாளில் நீங்கள் எல்லா நலன்களையும் பெற்று மன நிறைவுடன் நீடுடி வாழ இறையவனை வேண்டுகிறேன்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி...

வாழ்த்தும்,
அண்ணன்.

போங்கடா நீங்களும் உங்க பத்திரிக்கை தர்மமும்...

|

மனம் முழுதும் கொதிப்பாயிருந்தது பத்திரிக்கைக்களின் நிழ்காலத் தரத்தினையும் அவர்களின் ஊடக விபச்சாரத்தையும் எண்ணும்போது. எதேச்சையாய் தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்த வைதேகி காத்திருந்தாள் படத்தில் ஒரு சிறுவன் விஜயகாந்தை குச்சியினால் அடித்து போங்கடா நீங்களும் உங்க கல்யாணமும் என சொல்வதாய் ஒரு காட்சியினை பார்க்க அந்த தலைப்போடு ஒன்றி எழுத்தாக்க வேண்டும் என முடிவு செய்தேன்.

சுதந்திர காலத்தில் பிரிட்டிஷ் ஏகாபத்தியங்களை எதிர்த்ததிலிருந்து எமர்ஜென்சி, போர்பர்ஸ் என பல விஷயங்களை மக்களுக்கு சென்றடையச் செய்து விழிப்புணர்வை ஊட்டியவைகள் பத்திரிக்கைகள் தாம் என்பது இன்று பழங்கதையாகிவிட்டது. பத்திரிக்கைகள் சமுதாய அவலங்களுக்கு துணைபோய் முதுகு வளைந்து பணம் படைத்தோரின் காலடியில் படுத்துக்கிடக்கிறது.

ஆளும் கட்சிக்கு விளம்பரத்திற்காக ஜால்ரா அடிப்பதிலிருந்து அவர்களின் கைப்பாவையாய் மாறி அவர்களின் பிரச்சார பீரங்கிகளாய் மாறி இருக்கின்றன.

சிறு வயதில் தினமலர், சிறுவர் மலர் என்றார் உயிர். போட்டிப்போட்டுக்கொண்டு மாமாவின் கடையில் காத்திருந்து படித்ததெல்லாம் இன்று கதையாகி தினமலர் என்றாலே நெருப்பை அள்ளி தலையில் போட்டார்போல் ஒரு உணர்வு! ஆம், மஞ்சள் பத்திரிக்கையைவிட மகா மட்டமாய் இருக்கிறது அவர்கள் பத்திரிக்கை நடத்தும் விதம்.

குறிப்பாய் ஈழ விஷயங்களில் அவர்கள் காட்டும் ‘அக்கறை’ இருக்கிறதே, மெய்சிலிர்க்க வைக்கிறது. நண்பர் மதுரை சுவாமி அவர்களின் மூலம் திரு பொன்னுசாமி அவர்களின் இடுகையினைப் படித்தபோது  ’ஏன் இவர்களுக்கு இந்தப் பிழைப்பு’ எனத் தோன்றியது.

ஒரு மந்திரி, பத்திரிக்கையாளர்களிடம் எவ்வளவு கேவலமாய் நடந்துகொள்ள முடியுமோ அவ்வளவு நடந்து கொள்கிறார், அதைப்பற்றி எழுத முதுகெலும்பு இல்லை, பக்கத்து வீடுதானே எரிகிறது எனும் மனப்பான்மையில்.

இன்னும் இது பற்றியெல்லாம் நிறைய எழுதலாம்... கொஞ்சம் கூசுகிறது, எங்கே தடித்த வார்த்தைகளைப் பிரயோகித்து தரத்தைக் குறைத்துக்கொள்வேனோ என! நம்மால் முடிந்த ஒன்று, இத்தகைய ஈனர்களைப் புறக்கணிப்போம்.

நடிகைகளின் அந்தரங்கச் சாக்கடையை கிளறுவதே தொழிலாகக் கொண்டிருக்கும் இவர்களையெல்லாம் எண்ணும்போது இந்த இடுகையின் தலைப்புத்தான் தோன்றியது!

தாயே எம்மை மன்னியுங்கள்...

|

விடுமுறை என்றாலும் ஒரு முக்கிய நிகழ்வுக்காக அலுவலகம் சென்று பரபரப்பாய் இருந்து கிடைத்த கொஞ்ச ஓய்வில் முகிலனைப் படிக்கும்போது முதலில் புரியவில்லை. பட்டாபட்டியின் பதில் பின்னூட்டத்தைப் பார்த்த்ததும் விஷயத்தை ஊடகங்களின் வாயிலாய் படித்து தெரிந்த பின் மண்டைக்குள் ஜிவ்வென்று ஏறியது.

என்ன ஒரு கொடுமை என மனம் பதைத்து அய்யா வானம்பாடிகள், சகோதரி கலகலப்ரியா, லக்கி, பழமைபேசி என வரிசையாய் ஒவ்வொன்றாய் படித்து மானசீகமாய் அவர்களுடன் எனது கோபத்தை பகிர்ந்து கொண்டேன்.

தமிழ், எனக்குத் தெரிந்து இவ்வளவு தரம் தாழ்ந்ததில்லை! சில நய வஞ்சக நாய்களால் இன்று வந்தாரை வாழ வைக்கும் தமிழகம், வந்த ஒரு சொந்தத்தை, தமிழ்த்தாயை கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல் விரட்டியடித்த தமிழகம் என மாறி தலைகுனிந்து வெட்கி நிற்கிறது!

’பகைவர்க்கும் அருள்வாய் நெஞ்சே’ எனப் பாடிச்சென்ற எம்புலவன் பாரதி பிறந்த இந்நாட்டில், பகைமை உணர்ச்சியோடு வயது முதிர்ந்த மூதாட்டியை, சித்திரவதை செய்யப்பட்டு கணவனை இழந்த ஒரு பெண்மணியை, நாட்டுக்காக தனது இன்னுயிரை தனது குடும்பத்தாரோடு அர்ப்பணித்த ஒரு மாபரும் தலைவனின் தாயை, தமிழின் தாயை இப்படியா அவமதிப்பார்கள்?

இன்னுமொரு அன்னையை திருப்திப்படுத்த எப்படியெல்லாம் நாடகமாடுகிறார்கள் நாயினும் கீழான இந்த அரசியல்வாதிகள்? எண்ணும்போதே மனம் கொதிக்கிறது.

ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டுக்குள் வரும்போது உரிய பயண ஆதாரங்கள் இல்லாமல் வெளியேறவே முடியாது. எனவே அவர்கள் வந்தது அனுமதியில்லாமல் எனச் சொல்லி ஏமாற்ற முடியாது.

தங்களின் அன்னைக்கெல்லாம் மணி மண்டபம், அவர்களின் பெயரில் விருதுகள், நலத்திட்டங்கள் என வழங்கி கவுரவிக்கும் அரசியல்வாதிகள் ஒரு தன்மானத்தமிழனின் தாய்க்கு மருத்துவ சிகிச்சைக்கு அனுமதி அளிக்க வக்கில்லையா? கேவலம்!

இரவு முழுதும் மற்ற பதிவர்களின் ஆதங்கங்களைப் படித்தும், இங்கிருக்கும் சிங்கை நண்பர்கள் சத்ரியன், ரோஸ்விக்கோடு பேசித்தான் ஆதங்கத்தை கொட்டித்தீர்க்க முடிந்தது. காலையில் மதுரையிலிருந்து கொதிப்பாய் பேசிய எனது நண்பர் ஒருவர், தாயின் சிகிச்சைக்கு தான் முழுச்செலவையும் ஏற்பதாக சொன்னபோது, நீங்கள் மட்டுமல்ல உலகின் பல பாகங்களிலிருக்கும் தமிழர்கள் எல்லாம் தயாராகவே இருக்கிறோம் எனச் சொன்னேன். இதுதான் உண்மைத்தமிழர்களின் இன்றைய நிலைப்பாடு.

அய்யா அரசியல்வாதிகளே, தமிழைக்காக்கிறேன், செம்மொழி மாநாடு என சொல்லித்திரிபவர்களே, முதலில் மனிதாபிமானத்தை கற்றுக்கொள்ளுங்கள். வாழ்ந்த பின்னும் உங்களையெல்லாம் ஓரிருவராவது நினைத்துப் பார்க்கவேண்டும் என மனதில் வையுங்கள்!

தமிழ்த்தாயே, உங்களுக்கு ஏற்பட்ட இந்த அவமரியாதைக்காக தமிழனாய் தமிழ்நாட்டில் பிறந்ததற்கு வெட்கப்பட்டு மன்னிப்பு கேட்கிறேன்...

அங்காடித் தெரு - வாழ்வின் உண்மை...

|

திரைப்படங்களின் விமர்சனங்களைப் படிப்பதோடு சரி, எழுதுவதில் அவ்வளவாய் ஆர்வமோ எழுதியதோ கிடையாது, அதற்கெனவே பல ஜாம்பவான்கள் இருப்பதால். ஆயினும் நேற்று நண்பர் புண்ணாக்கு மூட்டை பாலாவுடன் அங்காடித்தெரு பார்த்ததும் அதனால் ஏற்பட்ட பாதிப்புக்கள் என்னை எழுதத்தூண்ட இங்கு நானும்.

சென்னை போன்ற பெரு நகரங்களில் மலிவு விலை என சொல்லி கடைக்காரர்கள் அரசாங்கத்தை, பொதுமக்களை ஏமாற்றுகிறார்கள் என எண்ணி வந்த நமக்கு இந்த படத்தின் மூலம் வசந்தபாலன் அங்குள்ள தொழிலாளர்களையும் சேர்த்துத்தான் என அழுத்தமாய் சொல்லி நம்மை உறைய வைத்துவிடுகிறார்.

பள்ளியில் முதல் மாணவனாய் இருந்தும் தகப்பனின் அகால மரணத்தால் படிக்க இயலாத சூழலில் குடும்பத்தைக் காக்க சென்னைக்கு நண்பனோடு வரும் கதாநாயகன், அந்த ஒரு பிரபல துணிக்கடையில் சேர்ந்து எப்படியெல்லாம் இன்னலுருகிறான் என்பதை சம்பவக்கோர்வைகளால் நம்முள் இயக்குனர் ஆளுமை செய்கிறார்.

அழகிய, துறுதுறுவென சோகத்தையெல்லாம் புதைத்து வெளியே சிரிக்கும் கதாநாயகி, அதற்கான அவளது குடும்ப சூழல். இவர்களுக்குள் வரும் பாசப்பிணைப்பினை பல பிணக்குகளுக்குப்பின் சொல்லியிருக்கிறார்.

இருவரும் தங்கள் காதல் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுதல் சில்லென குளிர்ந்த நீரை கடும் வெயிலில் அலைந்த பின் அருந்துவதால் கிடைக்கும் நிறைவாய் இருக்கிறது.

சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டால் எப்படி வேண்டுமாலும் முன்னேறலாம், அதற்கான வழிகள் நமக்காக திறந்தே இருக்கிறது என்பதை அந்த கழிப்பறையை சுத்தம் செய்து காசு வாங்கி சம்பாதிக்கும் பாத்திரம் மூலம் உணர்த்துகிறார்.

குள்ள மனிதர், ஒரு சீரழிந்த பெண் இருவருக்கும் இடையே உள்ள உறவினையும், அவர்களுக்கு பிறக்கும் குழந்தையினை வைத்து அவர்களின் உள்ளக்கிடைக்கையை வெளிப்படுத்தி நெகிழ வைக்கிறார்.

சிறார்களை வீட்டு வேலைக்கு அமரத்தி அவர்களை எப்படியெல்லாம் சிதைக்கிறார்கள் என்பதை கதாநாயகியின் சகோதரி மூலம் லேசாக கோடிட்டு காட்டுகிறார். சோகம், சோகம், மேலும் சோகம் என சொன்னாலும், கடைசியில் ஒரு வெளிச்சம் இருப்பதாகக் காட்டி நமக்கு கொஞ்சம் நம்பிக்கையை ஊட்டி அனுப்புகிறார்.

தொழில் நுட்ப விஷயங்கள் எல்லாம் ஏதுவாய்ப் பொருந்தி படத்தின் ஓட்டத்துக்கு பெரிதும் உதவியாய். வசனங்கள் எதார்த்தமாயும், பளீரென சாட்டையடியாகவும் பல இடங்களில்.

இந்த படத்தைப்பார்த்தபின், கடைக்கு சென்றால் அங்கு பணிபுரியும் வேலையாட்களை கண்டிப்பாய் நாம் மரியாதையாய் நடத்த வேண்டும் என நாம் எண்ணினாலும், அல்லது பணிக்கு அமர்த்தியிருப்பவர்கள் அவர்களுக்கு உற்ற மரியாதையை கொடுக்க வேண்டுமென நினைத்தாலோ பெரும் வெற்றிதான்.

மொத்தத்தில் உறைய வைக்கும் பல வாழ்வின் உண்மைகள்...

எங்கு போய் முடியும்?....

|


எனது நண்பரிடமிருந்து வந்த மின்னஞ்சலை வெட்டி கீழே ஒட்டியிருக்கிறேன், மிகுந்த வேதனையோடு... 

Today I read a comment in one of the Tamil daily website. It hurts a lot… Just to share with you all


 இன்று காலை பென்னாகரம் தொகுதியில் உள்ள நண்பனுக்கு போன் செய்தேன்... அவன் குடும்ப வோட்டுரிமை முழுவதும் விற்று விட்டானாம்....(ஏழு) விலை என்ன தெரியுமா ....ஒரு அரசாங்க ஊழியரான அவனது அப்பாவின் ஒரு மாத சம்பளத்தை விட அதிகம்,அதாவது பதினான்காயிரம் பிளஸ் வெட்டி ,ஷர்ட் சாரி ,கடந்த பத்து நாட்களாக வண்டிக்கு பெட்ரோல் அவனுக்கு பெட்ரோல் (குவாட்டர்).... தினப்படி ஒருமாதமாக நாள் ஒன்றுக்கு இருநூறு... இப்படி நீள்கிறது பட்டியல் ..... இதெல்லாம் வழங்கியது ஆளும்கட்சிமட்டும் தான் (இவன் வேற கட்சி கிட்ட வாங்கலையாம்) ஜென்டில் மேன்......???? இதுல கேவலமான ஒரு விஷயம் அவன் எம்பிஎ பட்டதாரி....... வாழ்க தேர்தல் கமிஷன்.... வளர்க முக குடும்பம்.... 

முன்பு எழுதிய கவிதை(?) இங்கு பொறுத்தமாய் இருக்குமென எண்ணுகிறேன்...

பயம்...

எப்போது சாவுயென
எல்லோரும் ஏங்கிடவே
எங்களூர் எம்.எல்.ஏ
ஏக்கமது பலித்திடுமோ
ஏகமாய் பீதியில்...****

கண்ணிருந்தும்...


காசு வாங்கி ஓட்டு போட்டு
கண்ணியத்தை கடைபிடித்து
கடமை செய்வாரென நினைக்கும்
கண்ணிருந்தும் குருடர் நாம்..

சுவராஸ்யமான பின்னூட்டம்...

|


பாலா ரோஸ்விக்குடன்...

சுதாகரின் (பித்தனின் வாக்கு) இடுகையில் பின்னூட்டத்தில் நம்ம பாலா ஒர் சம்பவத்தை அழகாய் சொல்ல, கேபிள் அண்ணாவுக்கு பின்னூட்டத்தையும் சேர்த்து ஒரு இடுகையாய் இங்கே!

ஐயா (சில்க்)பித்தன் அவர்களே!


பதிவு மிக நன்றாக இருந்தது! உங்களைப்போலவே எனக்கும் ஒரு அனுபவம்.


பத்தாவது படித்து முடிக்கும் வரை தனியாக சினிமாவுக்கு போனதில்லை. குடும்பத்துடன் தான். என்னுடைய பத்தாவது தேர்வு முடிந்தவுடன் தனியாக சினிமாவுக்கு போக அனுமதி கிடைத்தது. ஏதோ ஒரு படத்திற்கு போகலாம் என்று முடிவுசெய்து போஸ்டரை பார்த்துவந்து கிளம்பிக்கொண்டு (கிளப்பியல்ல) இருந்தேன். பக்கத்தில் (3 km ) இருந்த டூரிங் டாக்கீஸ், படம் : இளமை ஊஞ்சலாடுகிறது. எனக்கு படத்தின் தன்மை தெரியாது. என் தந்தைக்கு தெரியும் போல். அதுவரை அவரும் கேட்கவில்லை, நானும் என்னபடம் என்று சொல்லவில்லை.


சைக்கிளை எடுத்து வெளியே வைத்து காற்று அடித்தேன். துடைத்தேன். மணி பார்த்தேன். கிளம்ப சரியாக இருந்தது. வெளியே வந்தேன்.


அப்பொழுது நடந்தது கீழே:


ட்ட்
அப்பா: பார்த்து போயிட்டு வா.
நான்: சரிங்கப்பா.
அப்பா: எந்த தியேட்டர்?
நான்: ' xxxxxxxxxx ' தியேட்டர்.
அப்பா: என்ன படம்?
நான்: 'இளமை ஊஞ்சலாடுகிறது'
அப்பா: இளமை உஞ்சலாடுதோ, கமினாட்டி என்ன படத்துக்கு போகுது பாரு. உருப்புடவாபோற நீ. சைக்கிள வச்சிட்டு போய் மாட்டுக்கு தண்ணி காட்டு.
நான்: திரு திருவென்று விழித்தேன். இளமை ஊஞ்சலாடுகிறது படத்தைப்பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது அப்பொழுது. ஆனால் அந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற வெறி மட்டும் கிளம்பிவிட்டது.


அதே வெறியுடன் அந்த படத்தை 4 ஆண்டுகளுக்கு பிறகு பார்த்தேன்.
இப்படிதான் ஊஞ்சலாடி கிளம்பியது என் இளமை!


இப்படிக்கு,
பண்புடன் வாழ நினைக்கும் (ஆனால் முடியவில்லை ) பாலா.

இது கேபிள் அண்ணாவுக்கு இட்டிருக்கும் பின்னூட்டம்...


காணவில்லை அறிவிப்பு


பெயர்: கேபிள் சங்கர்
தொழில்: எல்லோரையும் கலாய்ப்பது (குறிப்பாக இதர சினிமா டைரேடர்களை)
வயது: Youth என்று பினாத்துகிறார். ஆனால் சரியான வயதில் அவருக்கு கல்யாணம் ஆகியிருந்தால் இந்நேரம் தாத்தாவாகியிருப்பார்.
காணாமல் போன இடம் : சிங்கப்பூர்
சேர்ந்திருக்கவேண்டிய இடம் : சென்னை.
அடையாளம்: அப்பாவி போல் தெரிவார். ஓரளவிற்கு தெளிந்த அறிவுதான் (சரக்கு அடிக்கும் வரை). சினிமாவை பற்றி நன்றாக பேசுவார். நன்றாக குறட்டை விடுவார். (யப்பா சாமி )


கண்டுபிடித்து கொடுப்பவருக்கு இனாமாக ஏதாவது கொடுக்கப்படும்.
பின்னூட்டங்களில் அசத்தும் பாலா இடுகையும் எழுத வேண்டும் எனும் அன்பு வேண்டுகோளை வைக்கிறேன்...

கிரிக்கெட் - தொடர் பதிவு...

|

அன்பு நண்பர் ஷங்கர் அழைக்க இதோ நானும் களத்தில்...

இத்தொடர்பதிவின் விதிமுறைகள்

1. உண்மையை மட்டுமே சொல்லவேண்டும்.
2. தற்போது கிரிக்கெட் விளையாடும் வீரர்கள் மட்டுமே குறிப்பிடவேண்டிய அவசியமில்லை
3. குறைந்தது இருவரையாவது தொடர்பதிவுக்கு அழைக்கவேண்டும்.

1.பிடித்த கிரிக்கெட் வீரர் –

சச்சின் – என் தம்பி என பெருமையாய் சொல்லிக்கொள்வேன் எப்போதும். என்றும் சச்சினைப்பற்றி எனது எண்ணம் ஒரே மாதிரிதான். சச்சின் அவுட் ஆனால் அதன் பின் பார்ப்பதையே தவிர்ப்பேன், அல்லது சுரத்தின்றி பார்ப்பேன். ஒரு உண்மையான விளையாட்டு வீரனுக்கு என் தம்பிதான் உதாரணம்...

2. பிடிக்காத கிரிக்கெட் வீரர் –

மியாண்டட் - அந்த ஒரு குரங்கு சேஷ்டை போதாதா?

3. பிடித்த வேகப் பந்து வீச்சாளர் –

அக்ரம் – பாகிஸ்தான் அணியில் இருந்த என்னை கவர்ந்த ஒரே பவுலர். இந்தியாவுக்காக அவர் பவுலிங் செய்யும்போது மட்டும் பிடிக்காது... ஹி..ஹி..

வால்ஸ் - வெஸ்ட் இண்டீஸ் பவுலர். எந்த ஒரு நேரத்திலும் பதட்டமில்லாமல் வீசுவார், ஜெண்டில் மேன்.

பொல்லாக் - தெ. ஆ பவுலர். இவரையும் ரொம்ப பிடிக்கும்.

4. பிடிக்காத வேகப்பந்து வீச்சாளர்

அக்தர் – சர்ச்சைக்குறிய பவுலர் என்பதால் இவரை பிடிக்காது.

5. பிடித்த சுழல்பந்து வீச்சாளர்

ஷேன் வார்ன் – என் தம்பியின் நண்பர், இந்த ஜம்பவான் மிரண்டது என் தம்பியிடம் மட்டும்தான் என்பதால் பிடிக்கும்.

6. பிடிக்காத சுழல்பந்து வீச்சாளர் -

பால் ஆடம்ஸ் - தெ.ஆ சுழல் பந்து வீச்சாளர். போடும் ஸ்டைல் சுத்தமாய் பிடிக்காது.

7. பிடித்த வலதுகை துடுப்பாட்டக்காரர் – சச்சின் – என் தம்பி

கிப்ஸ் -  ஆஸ்திரேலியாவை கதற அடித்து 434 - ஐ சேஸ் செய்ய உதவியதால்.. நல்ல களத்தடுப்பாளரும் கூட.

8. பிடிக்காத வலது கை துடுப்பாட்டக்காரர் - மோங்கியா மற்றும் மனோஜ் பிரபாகர்.

9. பிடித்த இடது கை துடுப்பாட்ட வீரர் - சவுரவ் கங்குலி மற்றும் லாரா.

10. பிடிக்காத இடது கை துடுப்பாட்ட வீரர்

வினோத் காம்ளி - என் தம்பி எவ்வளவோ உதவி செய்தும் கொழுப்பால் வீணாய் போனவர். (என் தம்பி இவரை, தான் கேப்டனாக இருக்கும்போது தேர்ந்தெடுத்தது தான் அவர் செய்த ஒரு மிகச் சிறிய தவறு என எண்ணுவேன்)

11. பிடித்த களத்தடுப்பாளர் - எல்லா தெ.ஆ வீரர்கள்.

12. பிடிக்காத களத்தடுப்பாளர் - அனில் கும்ப்ளே, பிரசாத், ஹர்பஜன்

13. பிடித்த ஆல்ரவுண்டர் – கபில்தேவ், மைக்கேல் பேவன், க்ளுஸ்னர்.

14. பிடிக்காத ஆல்ரவுண்டர் - மனோஜ் பிரபாகர்

15. பிடித்த நடுவர் - ஷெப்பர்ட், பில்லி பவுடன், வெங்கட் ராகவன்.

16. பிடிக்காத நடுவர் - டேரல் ஹேர், பக்னர், ஆலீம் தார், ஆசாத் ரப் அப்புறம் என் தம்பிக்கு தவறாய் அவுட் தரும் எவரும்.

17. பிடித்த நேர்முக வர்ணனையாளர் - ஹர்ஷா போக்ளே, கவாஸ்கர்.

18. பிடிக்காத நேர்முக வர்ணனையாளர் - ரமீஸ் ராஜா, ரவி சாஸ்திரி (கரு நாக்குக்காக)

19. பிடித்த அணி – இந்தியா

20. பிடிக்காத அணி – இந்தியாவை தோற்கடிக்கும் எந்த அணியும், ஆஸ்திரேலியாவை தோற்கடிக்காத எந்த அணியும் (இந்தியா தவிர)

21. விரும்பிப் பார்க்கும் அணிகளுக்கு இடையேயான போட்டிகள் – இந்தியா விளையாடும் போட்டிகள் அனைத்தும்.

22. பிடிக்காத அணிகளுக்கான போட்டி – ஆஸ்திரேலியா Vs பங்காளதேஷ்.

23. பிடித்த அணித் தலைவர் - கங்குலி, வெட்டோரி, தோனி, ஸ்டீவ் வாஹ்

24. பிடிக்காத அணித் தலைவர் - ரிக்கி பாண்டிங்

25. பிடித்த ஆரம்பத் துடுப்பாட்ட ஜோடி – கங்குலி-சச்சின், ஷேவாக்-சச்சின்

26. பிடிக்காத ஆரம்பத்துடுப்பாட்ட ஜோடி

ஜெயசூர்யா-கலுவித்தரன - நாம நிறையா தோத்தது இவங்க ரெண்டு பெரும் ஆடினப்போத்தான்.
.
27. உங்கள் பார்வையில் சிறந்த டெஸ்ட் வீரர் - என் தம்பி, ராகுல் ட்ராவிட், பார்டர்.

28. உங்கள் பார்வையில் சிறந்த ஒருநாள் போட்டி வீரர் - ஒன் அண்ட் ஒன்லி சச்சின்

29. பிடித்த போட்டி வகை – ஒருநாள்.

30. சிறந்த கிரிக்கெட் வாழ்நாள் சாதனையாளர் – சச்சின் (பாரத ரத்னா வெகு விரைவில்)

(இதில் நிறைய முகிலனோடு ஒத்துப்போகிறது...)

யாரையாவது தொடர அழைக்க வேண்டுமே?

ஸ்ரீகிருஷ்ணா எனும் வலைபதிவில் எழுதிவரும் தம்பி ஜெய். எல்லா கிரிக்கெட் மேட்ச்சுக்கும் லைவ் லின்க் கொடுப்பார்.

சேட்டைக்காரன் - இதிலும் அவரின் சேட்டையை பார்க்க வேண்டும்.

நடன நிகழ்ச்சிகள் - ஒரு சாடல்.

|

இங்கு சிங்கையில் தெரியும் தமிழ் சேனல்கள் சன், விஜய், வசந்தம் மற்றும் வண்ணத்திரை ஆகிய நான்கும். பொதுவாக தொலைக்காட்சியை அதிகம் பார்ப்பதில்லை அது நம்முடைய நேரத்தைக் கொன்று கொளுத்திப்போடும் என்பதால். அதிகமாய் பாடல்களை கேட்பதோடு சரி, கேட்டுக்கொண்டு நமது வேலைகளைத் தொடரலாம் என்பதால். நமது மனநிலைக்கேற்றவாறுதான் எந்த ஒரு பாடலாயிருந்தாலும் நம்முள் ஆக்கிரமிப்பதும் புறந்தள்ளப்படுவதும்.


நடன நிகழ்ச்சிகளுடன் கூடிய சில நிகழ்ச்சிகளை எதேச்சையாய் பார்க்க நேர்ந்தபோது என்னால் கொஞ்சம் கூட ஜீரணிக்க இயலாமல் மனம் கொதிப்புறவே இந்த இடுகை.

பாய்ஸ் VS கேர்ள்ஸ் என்ற நிகழ்ச்சியும் அதற்கு போட்டியாய் ராணி 6 ராஜா யாரு என்ற நிகழ்ச்சிகள் மொத்தமாய் கலாச்சார சீர்கேடாய் இருக்கிறது.

எல்லாம் செயற்கைத்தனமாயும், போட்டி பொறாமை என நாடகத்தனமாயும் இருக்க, குறிப்பாக ராணி 6... ல் இதுவரை சினிமாக்களில் மட்டுமே கண்டுவந்த அரைகுறை ஆடைகளில் ஆபாசமான அங்க அசைவுகளுடன் கூடிய நிகழ்வுகள் வெகு சாதாரணமாய்... கொடுமை.

இதை பார்க்கும் போது குழந்தைகள், பெற்றோர் என அவர்களின் மனநிலை என்னாகும் என எண்ணும் போது மனம் வேதனையுறுகிறது. இதற்கு அவர்கள் விளம்பரப்படுத்தும் உத்திகள் யாவும் பார்க்கும் போது ஆகா, தமிழ் கலாச்சாரம் வளர என்னமாய் பாடுபடுகிறார்கள் தமிழை வாழவைக்கிறோம் என சொல்லும் இவர்கள் எனத்தோன்றுகிறது.

இந்த இரட்டைவேடமிடும் இந்த கலாச்சாரத்தை சீரழிக்கும் இவர்களைப் பற்றியும் கொஞ்சம் சிந்திப்போமா? நமது குழந்தை செல்வங்களை இந்த மாய வலையில் வீழ்ந்து விடாமால் பாதுகாப்போமா?

தவறெனில் பின்னூட்டத்தில் சுட்டுங்கள்...

 

©2009 எண்ணத்தை எழுதுகிறேன்... | Template Blue by TNB