தாயே எம்மை மன்னியுங்கள்...

|

விடுமுறை என்றாலும் ஒரு முக்கிய நிகழ்வுக்காக அலுவலகம் சென்று பரபரப்பாய் இருந்து கிடைத்த கொஞ்ச ஓய்வில் முகிலனைப் படிக்கும்போது முதலில் புரியவில்லை. பட்டாபட்டியின் பதில் பின்னூட்டத்தைப் பார்த்த்ததும் விஷயத்தை ஊடகங்களின் வாயிலாய் படித்து தெரிந்த பின் மண்டைக்குள் ஜிவ்வென்று ஏறியது.

என்ன ஒரு கொடுமை என மனம் பதைத்து அய்யா வானம்பாடிகள், சகோதரி கலகலப்ரியா, லக்கி, பழமைபேசி என வரிசையாய் ஒவ்வொன்றாய் படித்து மானசீகமாய் அவர்களுடன் எனது கோபத்தை பகிர்ந்து கொண்டேன்.

தமிழ், எனக்குத் தெரிந்து இவ்வளவு தரம் தாழ்ந்ததில்லை! சில நய வஞ்சக நாய்களால் இன்று வந்தாரை வாழ வைக்கும் தமிழகம், வந்த ஒரு சொந்தத்தை, தமிழ்த்தாயை கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல் விரட்டியடித்த தமிழகம் என மாறி தலைகுனிந்து வெட்கி நிற்கிறது!

’பகைவர்க்கும் அருள்வாய் நெஞ்சே’ எனப் பாடிச்சென்ற எம்புலவன் பாரதி பிறந்த இந்நாட்டில், பகைமை உணர்ச்சியோடு வயது முதிர்ந்த மூதாட்டியை, சித்திரவதை செய்யப்பட்டு கணவனை இழந்த ஒரு பெண்மணியை, நாட்டுக்காக தனது இன்னுயிரை தனது குடும்பத்தாரோடு அர்ப்பணித்த ஒரு மாபரும் தலைவனின் தாயை, தமிழின் தாயை இப்படியா அவமதிப்பார்கள்?

இன்னுமொரு அன்னையை திருப்திப்படுத்த எப்படியெல்லாம் நாடகமாடுகிறார்கள் நாயினும் கீழான இந்த அரசியல்வாதிகள்? எண்ணும்போதே மனம் கொதிக்கிறது.

ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டுக்குள் வரும்போது உரிய பயண ஆதாரங்கள் இல்லாமல் வெளியேறவே முடியாது. எனவே அவர்கள் வந்தது அனுமதியில்லாமல் எனச் சொல்லி ஏமாற்ற முடியாது.

தங்களின் அன்னைக்கெல்லாம் மணி மண்டபம், அவர்களின் பெயரில் விருதுகள், நலத்திட்டங்கள் என வழங்கி கவுரவிக்கும் அரசியல்வாதிகள் ஒரு தன்மானத்தமிழனின் தாய்க்கு மருத்துவ சிகிச்சைக்கு அனுமதி அளிக்க வக்கில்லையா? கேவலம்!

இரவு முழுதும் மற்ற பதிவர்களின் ஆதங்கங்களைப் படித்தும், இங்கிருக்கும் சிங்கை நண்பர்கள் சத்ரியன், ரோஸ்விக்கோடு பேசித்தான் ஆதங்கத்தை கொட்டித்தீர்க்க முடிந்தது. காலையில் மதுரையிலிருந்து கொதிப்பாய் பேசிய எனது நண்பர் ஒருவர், தாயின் சிகிச்சைக்கு தான் முழுச்செலவையும் ஏற்பதாக சொன்னபோது, நீங்கள் மட்டுமல்ல உலகின் பல பாகங்களிலிருக்கும் தமிழர்கள் எல்லாம் தயாராகவே இருக்கிறோம் எனச் சொன்னேன். இதுதான் உண்மைத்தமிழர்களின் இன்றைய நிலைப்பாடு.

அய்யா அரசியல்வாதிகளே, தமிழைக்காக்கிறேன், செம்மொழி மாநாடு என சொல்லித்திரிபவர்களே, முதலில் மனிதாபிமானத்தை கற்றுக்கொள்ளுங்கள். வாழ்ந்த பின்னும் உங்களையெல்லாம் ஓரிருவராவது நினைத்துப் பார்க்கவேண்டும் என மனதில் வையுங்கள்!

தமிழ்த்தாயே, உங்களுக்கு ஏற்பட்ட இந்த அவமரியாதைக்காக தமிழனாய் தமிழ்நாட்டில் பிறந்ததற்கு வெட்கப்பட்டு மன்னிப்பு கேட்கிறேன்...

அங்காடித் தெரு - வாழ்வின் உண்மை...

|

திரைப்படங்களின் விமர்சனங்களைப் படிப்பதோடு சரி, எழுதுவதில் அவ்வளவாய் ஆர்வமோ எழுதியதோ கிடையாது, அதற்கெனவே பல ஜாம்பவான்கள் இருப்பதால். ஆயினும் நேற்று நண்பர் புண்ணாக்கு மூட்டை பாலாவுடன் அங்காடித்தெரு பார்த்ததும் அதனால் ஏற்பட்ட பாதிப்புக்கள் என்னை எழுதத்தூண்ட இங்கு நானும்.

சென்னை போன்ற பெரு நகரங்களில் மலிவு விலை என சொல்லி கடைக்காரர்கள் அரசாங்கத்தை, பொதுமக்களை ஏமாற்றுகிறார்கள் என எண்ணி வந்த நமக்கு இந்த படத்தின் மூலம் வசந்தபாலன் அங்குள்ள தொழிலாளர்களையும் சேர்த்துத்தான் என அழுத்தமாய் சொல்லி நம்மை உறைய வைத்துவிடுகிறார்.

பள்ளியில் முதல் மாணவனாய் இருந்தும் தகப்பனின் அகால மரணத்தால் படிக்க இயலாத சூழலில் குடும்பத்தைக் காக்க சென்னைக்கு நண்பனோடு வரும் கதாநாயகன், அந்த ஒரு பிரபல துணிக்கடையில் சேர்ந்து எப்படியெல்லாம் இன்னலுருகிறான் என்பதை சம்பவக்கோர்வைகளால் நம்முள் இயக்குனர் ஆளுமை செய்கிறார்.

அழகிய, துறுதுறுவென சோகத்தையெல்லாம் புதைத்து வெளியே சிரிக்கும் கதாநாயகி, அதற்கான அவளது குடும்ப சூழல். இவர்களுக்குள் வரும் பாசப்பிணைப்பினை பல பிணக்குகளுக்குப்பின் சொல்லியிருக்கிறார்.

இருவரும் தங்கள் காதல் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுதல் சில்லென குளிர்ந்த நீரை கடும் வெயிலில் அலைந்த பின் அருந்துவதால் கிடைக்கும் நிறைவாய் இருக்கிறது.

சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டால் எப்படி வேண்டுமாலும் முன்னேறலாம், அதற்கான வழிகள் நமக்காக திறந்தே இருக்கிறது என்பதை அந்த கழிப்பறையை சுத்தம் செய்து காசு வாங்கி சம்பாதிக்கும் பாத்திரம் மூலம் உணர்த்துகிறார்.

குள்ள மனிதர், ஒரு சீரழிந்த பெண் இருவருக்கும் இடையே உள்ள உறவினையும், அவர்களுக்கு பிறக்கும் குழந்தையினை வைத்து அவர்களின் உள்ளக்கிடைக்கையை வெளிப்படுத்தி நெகிழ வைக்கிறார்.

சிறார்களை வீட்டு வேலைக்கு அமரத்தி அவர்களை எப்படியெல்லாம் சிதைக்கிறார்கள் என்பதை கதாநாயகியின் சகோதரி மூலம் லேசாக கோடிட்டு காட்டுகிறார். சோகம், சோகம், மேலும் சோகம் என சொன்னாலும், கடைசியில் ஒரு வெளிச்சம் இருப்பதாகக் காட்டி நமக்கு கொஞ்சம் நம்பிக்கையை ஊட்டி அனுப்புகிறார்.

தொழில் நுட்ப விஷயங்கள் எல்லாம் ஏதுவாய்ப் பொருந்தி படத்தின் ஓட்டத்துக்கு பெரிதும் உதவியாய். வசனங்கள் எதார்த்தமாயும், பளீரென சாட்டையடியாகவும் பல இடங்களில்.

இந்த படத்தைப்பார்த்தபின், கடைக்கு சென்றால் அங்கு பணிபுரியும் வேலையாட்களை கண்டிப்பாய் நாம் மரியாதையாய் நடத்த வேண்டும் என நாம் எண்ணினாலும், அல்லது பணிக்கு அமர்த்தியிருப்பவர்கள் அவர்களுக்கு உற்ற மரியாதையை கொடுக்க வேண்டுமென நினைத்தாலோ பெரும் வெற்றிதான்.

மொத்தத்தில் உறைய வைக்கும் பல வாழ்வின் உண்மைகள்...

 

©2009 எண்ணத்தை எழுதுகிறேன்... | Template Blue by TNB