போங்கடா நீங்களும் உங்க பத்திரிக்கை தர்மமும்...

|

மனம் முழுதும் கொதிப்பாயிருந்தது பத்திரிக்கைக்களின் நிழ்காலத் தரத்தினையும் அவர்களின் ஊடக விபச்சாரத்தையும் எண்ணும்போது. எதேச்சையாய் தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்த வைதேகி காத்திருந்தாள் படத்தில் ஒரு சிறுவன் விஜயகாந்தை குச்சியினால் அடித்து போங்கடா நீங்களும் உங்க கல்யாணமும் என சொல்வதாய் ஒரு காட்சியினை பார்க்க அந்த தலைப்போடு ஒன்றி எழுத்தாக்க வேண்டும் என முடிவு செய்தேன்.

சுதந்திர காலத்தில் பிரிட்டிஷ் ஏகாபத்தியங்களை எதிர்த்ததிலிருந்து எமர்ஜென்சி, போர்பர்ஸ் என பல விஷயங்களை மக்களுக்கு சென்றடையச் செய்து விழிப்புணர்வை ஊட்டியவைகள் பத்திரிக்கைகள் தாம் என்பது இன்று பழங்கதையாகிவிட்டது. பத்திரிக்கைகள் சமுதாய அவலங்களுக்கு துணைபோய் முதுகு வளைந்து பணம் படைத்தோரின் காலடியில் படுத்துக்கிடக்கிறது.

ஆளும் கட்சிக்கு விளம்பரத்திற்காக ஜால்ரா அடிப்பதிலிருந்து அவர்களின் கைப்பாவையாய் மாறி அவர்களின் பிரச்சார பீரங்கிகளாய் மாறி இருக்கின்றன.

சிறு வயதில் தினமலர், சிறுவர் மலர் என்றார் உயிர். போட்டிப்போட்டுக்கொண்டு மாமாவின் கடையில் காத்திருந்து படித்ததெல்லாம் இன்று கதையாகி தினமலர் என்றாலே நெருப்பை அள்ளி தலையில் போட்டார்போல் ஒரு உணர்வு! ஆம், மஞ்சள் பத்திரிக்கையைவிட மகா மட்டமாய் இருக்கிறது அவர்கள் பத்திரிக்கை நடத்தும் விதம்.

குறிப்பாய் ஈழ விஷயங்களில் அவர்கள் காட்டும் ‘அக்கறை’ இருக்கிறதே, மெய்சிலிர்க்க வைக்கிறது. நண்பர் மதுரை சுவாமி அவர்களின் மூலம் திரு பொன்னுசாமி அவர்களின் இடுகையினைப் படித்தபோது  ’ஏன் இவர்களுக்கு இந்தப் பிழைப்பு’ எனத் தோன்றியது.

ஒரு மந்திரி, பத்திரிக்கையாளர்களிடம் எவ்வளவு கேவலமாய் நடந்துகொள்ள முடியுமோ அவ்வளவு நடந்து கொள்கிறார், அதைப்பற்றி எழுத முதுகெலும்பு இல்லை, பக்கத்து வீடுதானே எரிகிறது எனும் மனப்பான்மையில்.

இன்னும் இது பற்றியெல்லாம் நிறைய எழுதலாம்... கொஞ்சம் கூசுகிறது, எங்கே தடித்த வார்த்தைகளைப் பிரயோகித்து தரத்தைக் குறைத்துக்கொள்வேனோ என! நம்மால் முடிந்த ஒன்று, இத்தகைய ஈனர்களைப் புறக்கணிப்போம்.

நடிகைகளின் அந்தரங்கச் சாக்கடையை கிளறுவதே தொழிலாகக் கொண்டிருக்கும் இவர்களையெல்லாம் எண்ணும்போது இந்த இடுகையின் தலைப்புத்தான் தோன்றியது!

தாயே எம்மை மன்னியுங்கள்...

|

விடுமுறை என்றாலும் ஒரு முக்கிய நிகழ்வுக்காக அலுவலகம் சென்று பரபரப்பாய் இருந்து கிடைத்த கொஞ்ச ஓய்வில் முகிலனைப் படிக்கும்போது முதலில் புரியவில்லை. பட்டாபட்டியின் பதில் பின்னூட்டத்தைப் பார்த்த்ததும் விஷயத்தை ஊடகங்களின் வாயிலாய் படித்து தெரிந்த பின் மண்டைக்குள் ஜிவ்வென்று ஏறியது.

என்ன ஒரு கொடுமை என மனம் பதைத்து அய்யா வானம்பாடிகள், சகோதரி கலகலப்ரியா, லக்கி, பழமைபேசி என வரிசையாய் ஒவ்வொன்றாய் படித்து மானசீகமாய் அவர்களுடன் எனது கோபத்தை பகிர்ந்து கொண்டேன்.

தமிழ், எனக்குத் தெரிந்து இவ்வளவு தரம் தாழ்ந்ததில்லை! சில நய வஞ்சக நாய்களால் இன்று வந்தாரை வாழ வைக்கும் தமிழகம், வந்த ஒரு சொந்தத்தை, தமிழ்த்தாயை கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல் விரட்டியடித்த தமிழகம் என மாறி தலைகுனிந்து வெட்கி நிற்கிறது!

’பகைவர்க்கும் அருள்வாய் நெஞ்சே’ எனப் பாடிச்சென்ற எம்புலவன் பாரதி பிறந்த இந்நாட்டில், பகைமை உணர்ச்சியோடு வயது முதிர்ந்த மூதாட்டியை, சித்திரவதை செய்யப்பட்டு கணவனை இழந்த ஒரு பெண்மணியை, நாட்டுக்காக தனது இன்னுயிரை தனது குடும்பத்தாரோடு அர்ப்பணித்த ஒரு மாபரும் தலைவனின் தாயை, தமிழின் தாயை இப்படியா அவமதிப்பார்கள்?

இன்னுமொரு அன்னையை திருப்திப்படுத்த எப்படியெல்லாம் நாடகமாடுகிறார்கள் நாயினும் கீழான இந்த அரசியல்வாதிகள்? எண்ணும்போதே மனம் கொதிக்கிறது.

ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டுக்குள் வரும்போது உரிய பயண ஆதாரங்கள் இல்லாமல் வெளியேறவே முடியாது. எனவே அவர்கள் வந்தது அனுமதியில்லாமல் எனச் சொல்லி ஏமாற்ற முடியாது.

தங்களின் அன்னைக்கெல்லாம் மணி மண்டபம், அவர்களின் பெயரில் விருதுகள், நலத்திட்டங்கள் என வழங்கி கவுரவிக்கும் அரசியல்வாதிகள் ஒரு தன்மானத்தமிழனின் தாய்க்கு மருத்துவ சிகிச்சைக்கு அனுமதி அளிக்க வக்கில்லையா? கேவலம்!

இரவு முழுதும் மற்ற பதிவர்களின் ஆதங்கங்களைப் படித்தும், இங்கிருக்கும் சிங்கை நண்பர்கள் சத்ரியன், ரோஸ்விக்கோடு பேசித்தான் ஆதங்கத்தை கொட்டித்தீர்க்க முடிந்தது. காலையில் மதுரையிலிருந்து கொதிப்பாய் பேசிய எனது நண்பர் ஒருவர், தாயின் சிகிச்சைக்கு தான் முழுச்செலவையும் ஏற்பதாக சொன்னபோது, நீங்கள் மட்டுமல்ல உலகின் பல பாகங்களிலிருக்கும் தமிழர்கள் எல்லாம் தயாராகவே இருக்கிறோம் எனச் சொன்னேன். இதுதான் உண்மைத்தமிழர்களின் இன்றைய நிலைப்பாடு.

அய்யா அரசியல்வாதிகளே, தமிழைக்காக்கிறேன், செம்மொழி மாநாடு என சொல்லித்திரிபவர்களே, முதலில் மனிதாபிமானத்தை கற்றுக்கொள்ளுங்கள். வாழ்ந்த பின்னும் உங்களையெல்லாம் ஓரிருவராவது நினைத்துப் பார்க்கவேண்டும் என மனதில் வையுங்கள்!

தமிழ்த்தாயே, உங்களுக்கு ஏற்பட்ட இந்த அவமரியாதைக்காக தமிழனாய் தமிழ்நாட்டில் பிறந்ததற்கு வெட்கப்பட்டு மன்னிப்பு கேட்கிறேன்...

 

©2009 எண்ணத்தை எழுதுகிறேன்... | Template Blue by TNB