ரோஸ்விக் பிறந்தநாள்...

|

இன்றைய காலைப்பொழுது மிக இனிமையான தகவலுடன் தொடங்கியது. ஆம், அன்புத் தம்பி ரோஸ்விக்-கின் பிறந்த நாள் என சி்ங்கை பிளாக்கர்ஸ் மெயிலில் இருந்து தகவல். ஆஹா, உடன் இருக்கிறோம், தெரியவில்லையே என வியந்து (செல்லமாய் மனதுக்குள் தி்ட்டு) அவர் எழக்காத்திருந்து வாழ்த்துக்களை தெரிவித்து, உடன் ஒரு இடுகையாக்க முடிவுசெய்து... இப்போது உங்களோடு...


ஒரு பின்னூட்டம் வாயிலாகத்தான் அறிமுகமானது தம்பியுடன். ஓட்டு போடுவதைப்பற்றி அவர் எழுதியிருந்த ஒரு விஷயத்திற்கு பதில் சொல்லப்போக கிடைத்த அந்த ஆரம்ப நட்பு வேர்விட்டு இன்று விருட்சமாய்....

சிங்கை இடுகையாளர்களின் அறிமுகம் இவரால்தான் எனக்குக் கிடைத்தது. அண்ணா எனப்பேசும்போதே மனதிற்குள் சில்லென ஒரு சிலிர்ப்பு ஏற்படும். அருகிலேயே பணியிடம், ஒரே இடத்தில் தங்கியிருத்தல், எல்லா விஷயங்களிலும் உறுதுணையாயிருத்தல் என பல விஷயங்களை நான் பெருமையாய் சொல்லிக்கொள்ளலாம். வயதில் தான் தம்பி, விஷயங்களில் அண்ணன். அறிவுறுத்துதலிலாகட்டும், எதையும் திட்டமிட்டு செய்வதிலாகட்டும், வீட்டு நிர்வாகத்தி்லாகட்டும், மிகவும் சரியாக செய்வார்.

சில நட்புக்கள் ஏன் தாமதமாய் கிடைத்தது என ஏங்க வைக்கும். தம்பியுடன் கிடைத்த நட்பு அந்த வகையைச் சேர்ந்ததே... எனக்கு தம்பி இல்லாத குறையை போக்குபவர்களில் ரோஸ்விக்கும் ஒருவர் என சொல்வதில் பெருமை அடைகிறேன்.

இந்த இனிய பிறந்த நாளில் நீங்கள் எல்லா நலன்களையும் பெற்று மன நிறைவுடன் நீடுடி வாழ இறையவனை வேண்டுகிறேன்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி...

வாழ்த்தும்,
அண்ணன்.

போங்கடா நீங்களும் உங்க பத்திரிக்கை தர்மமும்...

|

மனம் முழுதும் கொதிப்பாயிருந்தது பத்திரிக்கைக்களின் நிழ்காலத் தரத்தினையும் அவர்களின் ஊடக விபச்சாரத்தையும் எண்ணும்போது. எதேச்சையாய் தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்த வைதேகி காத்திருந்தாள் படத்தில் ஒரு சிறுவன் விஜயகாந்தை குச்சியினால் அடித்து போங்கடா நீங்களும் உங்க கல்யாணமும் என சொல்வதாய் ஒரு காட்சியினை பார்க்க அந்த தலைப்போடு ஒன்றி எழுத்தாக்க வேண்டும் என முடிவு செய்தேன்.

சுதந்திர காலத்தில் பிரிட்டிஷ் ஏகாபத்தியங்களை எதிர்த்ததிலிருந்து எமர்ஜென்சி, போர்பர்ஸ் என பல விஷயங்களை மக்களுக்கு சென்றடையச் செய்து விழிப்புணர்வை ஊட்டியவைகள் பத்திரிக்கைகள் தாம் என்பது இன்று பழங்கதையாகிவிட்டது. பத்திரிக்கைகள் சமுதாய அவலங்களுக்கு துணைபோய் முதுகு வளைந்து பணம் படைத்தோரின் காலடியில் படுத்துக்கிடக்கிறது.

ஆளும் கட்சிக்கு விளம்பரத்திற்காக ஜால்ரா அடிப்பதிலிருந்து அவர்களின் கைப்பாவையாய் மாறி அவர்களின் பிரச்சார பீரங்கிகளாய் மாறி இருக்கின்றன.

சிறு வயதில் தினமலர், சிறுவர் மலர் என்றார் உயிர். போட்டிப்போட்டுக்கொண்டு மாமாவின் கடையில் காத்திருந்து படித்ததெல்லாம் இன்று கதையாகி தினமலர் என்றாலே நெருப்பை அள்ளி தலையில் போட்டார்போல் ஒரு உணர்வு! ஆம், மஞ்சள் பத்திரிக்கையைவிட மகா மட்டமாய் இருக்கிறது அவர்கள் பத்திரிக்கை நடத்தும் விதம்.

குறிப்பாய் ஈழ விஷயங்களில் அவர்கள் காட்டும் ‘அக்கறை’ இருக்கிறதே, மெய்சிலிர்க்க வைக்கிறது. நண்பர் மதுரை சுவாமி அவர்களின் மூலம் திரு பொன்னுசாமி அவர்களின் இடுகையினைப் படித்தபோது  ’ஏன் இவர்களுக்கு இந்தப் பிழைப்பு’ எனத் தோன்றியது.

ஒரு மந்திரி, பத்திரிக்கையாளர்களிடம் எவ்வளவு கேவலமாய் நடந்துகொள்ள முடியுமோ அவ்வளவு நடந்து கொள்கிறார், அதைப்பற்றி எழுத முதுகெலும்பு இல்லை, பக்கத்து வீடுதானே எரிகிறது எனும் மனப்பான்மையில்.

இன்னும் இது பற்றியெல்லாம் நிறைய எழுதலாம்... கொஞ்சம் கூசுகிறது, எங்கே தடித்த வார்த்தைகளைப் பிரயோகித்து தரத்தைக் குறைத்துக்கொள்வேனோ என! நம்மால் முடிந்த ஒன்று, இத்தகைய ஈனர்களைப் புறக்கணிப்போம்.

நடிகைகளின் அந்தரங்கச் சாக்கடையை கிளறுவதே தொழிலாகக் கொண்டிருக்கும் இவர்களையெல்லாம் எண்ணும்போது இந்த இடுகையின் தலைப்புத்தான் தோன்றியது!

 

©2009 எண்ணத்தை எழுதுகிறேன்... | Template Blue by TNB