ஒரு சம்பவம்...
கோயம்புத்தூரில் மாமா வீட்டில் தங்கி அவரது கம்பெனியிலேயே எம்.சி.ஏ ப்ராஜெக்ட் செய்த சமயம் நடந்த ஒரு நிகழ்வும், எனக்கு நிகழ்ந்த ஒன்றும் தான் இந்த இடுகையின் சாரம்சங்கள்.
மாமாவின் நண்பர் பொருட்காட்சிக்கு அவரது மனைவி மற்றும் மகனுடன் சென்றிருக்கிறார். நல்ல கூட்டம். வார இறுதி வேறு, சொல்லவா வேண்டும். மகனை கையிலேயே பிடித்து அழைத்து வந்தவர்களுக்கு ஒரே அதிர்ச்சி. திடீரென பையனைக் காணோம்.
கதறி அங்கிங்கும் அரைமணி நேரம் தேட, அவரது துணைவியார் மயங்கி விழ தேட ஒரே பரபரப்பு, அந்த மைக் அறிவிப்பு வரும் வரை. அது, 'இங்கு அப்பாவாவையும் அம்மாவையும் காணவில்லை என ஒரு பையன் (பெயரை சொல்லி) இங்கு வந்து எங்களிடம் வந்து சொல்லி சிரித்துக்கொண்டு ஜாலியாக இருக்கிறார், பெற்றோர்கள் எங்கிருந்தாலும் வரவும்...
ஒரு வேண்டுகோள்...
இது சாதாரண கண்ணா மூச்சி ஆட்டமல்ல. ஒவ்வொரு விநாடியும் பதறவைத்தது கதற வைக்கும் ஆட்டம். என் மகனை இங்கு மார்க்கெட்டில் தொலைத்து, அரைமணி நேரம் அலைந்து கதறி நான்கு பக்கமும் நான் என் மனைவி, என் நண்பர், அவரது மனைவி என நால்வரும் தேடி அலைய, எங்கள் பிளாக்கிற்கு சென்றிருப்பானோ என எண்ணி அங்கெல்லாம் சென்று பார்க்க, பைத்தியம்போல் அங்கும் இங்கும் நான்கு திசைகளிலும் அலைந்தோம்.
கண்ணீரோடு கதறி சென்ற எனது மனைவியை பார்த்து ஒருவர் அருகே சர்ச்சில் அழைத்துச்சென்று காட்ட, என் மகன் கூலாக கார் வைத்து விளையாண்டுக்கொண்டு, என்னம்மா அழறீங்க என கேட்க, இல்ல கண்ணுல தூசு விழுந்துடுச்சின்னு அம்மணி சொல்ல, அப்பப்பா சொல்ல வார்த்தைகளில்லை. அதன் பின் ஒரே சந்தோஷ அழுகை, எங்களுக்கும் எனது நண்பரின் குடும்பத்தாருக்கும்.
நடந்தது இதுதான், எனது மகன் தனியே தனியே வருவதை பார்த்து கூப்பிட்டு உட்கார வைத்திருக்கிறார்கள். ஆங்கிலத்தில் கேட்ட கேள்விக்கு பெயர், அப்பா அம்மா பெயர் மட்டும் சொல்லியிருக்கிறான். வேறு சொல்ல தெரியவில்லை. அந்த கார் இன்னும் நினைவாய் என் வீட்டில்...
கோவையில் மாமாவின் நண்பருக்கு நடந்தது போல் எதிர்ப்பார்க்க முடியாது. எனக்கு நிகழ்ந்தது போல் நிறைய சம்பவங்களை கேட்டிருக்கலாம், அனுபவப்பட்டிருக்கலாம்.
குழந்தைகளை கூட்டம் நிறைந்த இடங்களுக்கு அழைத்துச்செல்லும்போது நாம் எவ்வளவுதான் கவனமாய் பார்த்துக்கொண்டாலும், தொலைந்துவிட நிறைய வாய்ப்பிருக்கிறது. அதற்காக கிடைத்த கசப்பான அனுபவத்திற்குப்பின் என் மாமா எப்போதோ என்னிடம் சொன்ன ஆனால் இப்போது பின்பற்றுகின்ற சில விஷயங்களை பிடித்திருந்தால் நீங்களும் செய்யலாமே?
- உங்களிடைய செல்ஃ போன் எண்ணை சொல்லித்தந்து விடுங்கள்.
- அவர்களின் சட்டைப்பையில் முழு முகவரி மற்றும் தொடர்பு எண் எழுதிய ஒரு தாளினை வைத்துவிடுங்கள். விசிட்டிங் கார்ட் இருந்தால் மிக நன்று.
- மற்றவர்களிடம் கூச்சமின்றி பேசுவதற்கு பழக்கப்படுத்துங்கள்...
- மிக முக்கியமாக இதை எல்லாம் ஒருவேளை காணாமல் போனால் மட்டுமேமற்றவர்களுக்கு சொல்ல அல்லது காட்ட வேண்டும், போலீஸ் அங்கிளை பார்த்தால் முதலில் சொல்லவும் சொல்லித் தாருங்கள்.
- கடைசியாய் தொலையாமல் பார்த்துக்கொள்ளுங்கள்...